நந்தவனம்🌹🌹🌹

அத்தியாயம் – 1

பூஞ்சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு நடுவே பட்டாம்பூச்சியாய்… கற்பனை கதைகளில் வரும் தேவதை போல் துள்ளிக் கொண்டு ஓடினாள் குட்டி பாப்பா கயல்…

அவள் முன்னே அவளது நகலோ என்று எண்ணம் தோன்றும் வண்ணம் ஓர் முயல்…

“ஏய்! ஓடாதே நில்லு”-அவள் தன் கொஞ்சும் குரலில் கூவி முடிக்க…

“ஹேப்பி பர்த்டே டூ யூ… ஹேப்பி பர்த்டே டூ யூ… ஹேப்பி பர்த்டே டூ யூ…” பாடல் ஒலித்தது. “ஹேப்பி பர்த்டே டூ யூ செல்லம்” – அவள் அம்மாவின் குரல்.

ஆனந்தமாய் அன்னையை அணைக்க ஓடியவள்… திடீரென்று நின்றாள்…

எங்கிருந்தோ ஒரு குரல்…

“கயலு…… கயலு…… நேரமாச்சு. சாப்பிட போகணும். எந்திரி“

அக்குரல் கேட்ட அடுத்த கணமே கயல் நின்றிருந்த பூந்தோட்டம் இருண்டது. கண்களை கசக்கி உற்றுப் பார்த்தாள். காருண்யா அக்கா.

“காரு அக்கா! அம்மா எங்க போய்ட்டாங்க”

“எந்த அம்மா கயலு? கனா கினா கண்டியா?”

“அப்படீனா?“

கண்டது கனவென்பதும் தெரியவில்லை. கனவென்றால் என்ன என்பதும் விளங்கவில்லை.
ஐந்து வயது குட்டி பொண்ணுக்கு விளக்கிச் சொல்ல காருண்யாவிற்கு நேரமில்லை.

“நேரமாயிடுச்சு… சாப்பிட போவோம். இந்தா…” அறைத் தூக்கத்தில் நின்றிருந்த கயலின் கையில் தட்டை திணித்தாள்.


காலை 6:30 மணி.

நேற்று மாலை உறங்கிப் போன கதிரவன் கண்விழித்து அரை மணி நேரம் ஆகிப் போனது.

பொங்கிக் கொண்டிருந்த பாலை அணைத்துவிட்டு காப்பி போட்டு எடுத்துக் கொண்டு சமயற்கட்டை விட்டு நகர்ந்தாள் பவித்ரா. ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த பிரேமிடம் நீட்டினாள்.

“அப்றமா மொபைல் பாத்துக்கலாம் பிரேம். சீக்கிரம் குடிச்சுட்டு வா. பாப்பாவ ஒன்னா போய் எழுப்புவோம்“

“ஆமாம் ஆமாம்… நேரம் ஆகிடுச்சு. எட்டரை மணிக்கு நம்ம வீட்லேர்ந்து கெளம்பனும்” – காப்பியை வாங்கி மட மடவென ஐந்தே நொடியில் தொண்டைக்குள் இறக்கினான்.

“மெதுவா மெதுவா. அதுக்குன்னு இவ்ளோ பாஸ்டாவா?” – என்று சிரித்தாள்.

“வா பவி, பாப்பாவ எழுப்புவோம்”. அவளது கைகளை பற்றிக் கொண்டு படுக்கையறை நோக்கி நடந்தான்.



அத்தியாயம் – 2

படுக்கையறை முழுவதையும் அலங்கரித்த இளஞ்சிவப்பு வண்ணம் ஜன்னல்வழி எட்டிப் பார்க்கும் கதிரவனால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

மெத்தையின் மேல் தூங்கிக் கொண்டிருக்கும் மகளை எழுப்ப அருகே சென்றான்.

“பிரேம்… பிரேம்… ஒரு நிமிஷம்” – என்றாள் தன் குரலின் வேகத்தைக் குறைத்தபடி.

“என்னாச்சு?”

கட்டிலின் அடியில் அட்டைப் பெட்டியில் ஒளித்து வைத்திருந்த பரிசை எடுத்தாள்.

“முக்கியமான விஷயத்த மறந்துட்டோம் பாத்தியா”

அவனும் மறந்து விட்டதை நினைத்து புன்னகைத்தான். “இப்போ எழுப்பவா?” வினவினான்.

“ம்ம்ம்“

“பாப்பா… என் செல்லக்குட்டி… எந்திரிங்க… அப்பாவும் அம்மாவும் பாப்பாவுக்கு என்ன வெச்சிருக்கோம்னு பாருங்க…”

“அப்பாவும் அம்மாவும் என்னமோ வச்சிருக்காங்க. என்னவா இருக்கும்?” தூக்கத்திலிருந்து அவள் மனம் தட்டி எழுப்பியது.

எழுந்தவள் அடுத்த நொடி தாவிக் குதித்து பவித்ராவின் கையிலிருந்த டெட்டி பியரை அனணத்துக் கொண்டாள். “ஹை… பொம்ம”.

“ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டி” – இருவரும் அவளை கட்டியணைத்துக் கொண்டனர். வலது கன்னத்தில் பவியும் இடது கன்னத்தில் ப்ரேமும் முத்தமிட்டனர்.

“பாப்பாவுக்கு புடிச்சிருக்கா?” – என்றாள் பவி.

“ரொம்ம்ம்ப….மா லல்லி கிட்ட என் பொம்மைய காட்டிட்டு வரவா?”

“லல்லி தூங்கிட்டு இருக்கானு லேகா ஆன்ட்டி சொன்னாங்க. குட் கேர்ள்ஸ் தூங்குறவங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. என் பாப்பா குட் கேர்ளா பேட் கேர்ளா? சொல்லுங்க…“

“குட் கேர்ள் மா”

“அப்போ நம்ம லல்லி கிட்ட பொம்மைய அப்றமா காட்டுவோமா?’

“ஓகேமா…” – இச்சிறுவயதிலும் அழகாய் புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவளாய் தலையாட்டினாள்.

[லல்லி – பவியின் பக்கத்துக்கு வீட்டு தோழி லேகாவின் நான்கு வயது மகள். இருவரும் வீட்டுநடப்பு நாட்டுநடப்பு என பேசி பேசி நட்புறவை வளர்த்த சமயங்களில்… இரண்டு குழந்தைகளின் நட்பும் மலரத் தொடங்கியது.]

“பிரேம்… பாப்பாவ குளிப்பாட்டிட்டு நீயும் ரெடி ஆகு. நான் போய் எல்லாம் ரெடி பன்றேன்” நேரம் ஓடுவதை நினைவு படுத்தும் மனைவியாய் மீண்டும் பவி.

“ம்ம்ம்” தலையாட்டியபடி தன் மகளிடம், “பாப்பா நம்ம இன்னக்கி ஒரு எடத்துக்கு போகப் போறோம். அம்மா வரதுக்குள்ள ரெடி ஆயிடுவோமா?”

“எங்கப் போறோம்… எங்கப் போறோம்… சொல்லுங்கப்பா… ப்ளீளீளீஸ்ஸ்” ஆர்வத்தில் மெத்தைமேல் குதித்தாள்.

“அது சர்ப்ரைஸ். அப்பா இப்போ சொல்ல மாட்டேன். ரெடி ஆனாதான் சொல்லுவேன்”

“ஹ்ம்ம்… ஓகேப்பா…”


பல் துலக்கி குளியலும் முடித்து தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் காருண்யா.

எதிரில் வந்த மீனா மேடத்திற்கு ஒரு வணக்கம் வைத்தாள்.

“குட் மார்னிங் மேடம்”

“குட் மார்னிங்! குட் மார்னிங்!… காருண்யா, இன்னைக்காச்சும் நீயும் கயலும் லேட் பண்ணாம ப்ரேயருக்கு சீக்கிரமா வர பாருங்க” என்றார் கண்டிப்புடன்.

“ஓகே மேடம்”

“சே! டெய்லி இந்த கயலால நானும் கெட்டப் பேரு வாங்குறேன்” முனுமுனுத்தபடி அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே போர்வையோடு போர்வையாக பாய்மேல் சுருண்டு கிடந்த கயலையும் அவளருகே கிடந்த தட்டையும் கண்டு கோபம் தலைக்கேறியது. அருகில் சென்று வேகமாய் போர்வையை இழுத்தாள்.

தூக்கம் களைந்து கண் விழித்த கயல், “சாரி க்கா…” என்றாள் பாவமாக.

அவளது பாவமான முகமும் ‘சாரி அக்கா’ என்னும் வார்த்தையும் காருண்யாவிற்கு புதிதல்ல. அதற்கு அவள் மயங்கி மன்னிப்பதும் புதிதல்ல. உண்மையான பாசம் எப்படிப்பட்ட கோபமாயினும் அதன் வீரியத்தை குறைப்பதென்பது இயற்கை தானே. காருண்யாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

“எத்தன தடவ கயலு எழுப்பி விடுறது. போ. போய் பல்லு வெளிக்கிட்டு வா. டைம் வேற ஆயிடுச்சு. நீ குளிக்க வேண்டாம். மேடம் கேட்டா குளிச்சாச்சுனு சொல்லிடலாம்”

“ம்ம்ம் சரி க்கா… ஆனா…” என்று இழுத்தாள்.

“என்ன ஆனா… சொல்லு கயலு”

“பொய் சொல்லக்கூடாது. தப்புனு மேடம் சொன்னாங்களே க்கா?”

“ம்க்கூம்… டெய்லி சீக்கிரம் வாங்கனு தான் சொல்றாங்க. அத மட்டும் கேக்க மாட்டா… இப்ப என்கிட்ட டிஸைன் டிஸைனா கேள்வி கேட்பா” காருண்யா மனதிற்குள்ளேயே முனுமுனுத்தாள்.

கயலின் கேள்விக்கு ஞாயமான பதிலற்று சமாளித்தாள். “சும்மா தொன தொனனு கேள்வி கேக்காம போய் பல்லு வெளிக்கிட்டு வா”

“ம்ம்ம்… ஓகே க்கா”

தன் பெட்டியிலிருந்து பேஸ்ட் ப்ரஷ்ஷை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றாள்.



அத்தியாயம் – 3

பல் துலக்கி விட்டு அரை மணி நேரம் கழித்து திரும்பினாள் கயல்.

காத்துக் கொண்டிருந்த காருண்யா சளித்துக் கொண்டாள். “பல்லு வெளக்க உனக்கு இவ்ளோ நேரமா கயலு?”

“சாரி க்கா… அது வந்து…”

“நீ ஒன்னும் சொல்ல வேணாம். டெய்லி ஒரு ரீஸன் சொல்ற. போலாம். வா”

பல் துலக்க செல்பவள் தன்னையும் மறந்து குழாயில் தண்ணீரை ஓட விட்டபடி சுவற்றை பார்த்துக் கொண்டு தன் கனவை கண்களின் உள்திரையில் ஓட விட்டு தன்னிலை மறப்பதென்பது கயலுக்கு வழக்கமாகிப் போன விஷயம் தான். இன்றும் அதே தான்.

இருவரும் அவரவர் தட்டை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு விரைந்தனர்.

அங்கிருந்த மேசை மேல் அவரவர் இடத்தில் தட்டை வைத்து விட்டு மூச்சிரைக்க வழிபாட்டுக் கூடத்திற்கு ஓடினர் யாரும் பார்க்காவிட்டால் நேரத்திற்கு வந்தவர்கள் போல் வரிசையில் பவ்வியமாய் நின்று விடலாம் என்றெண்ணி.

அங்கே நின்றிருந்த மீனா மேடம் கண்ணில் பட்டு விட்டனர்.ஐயோ பாவம். இருவரும் மாட்டிக் கொண்டு விழித்தனர்.

“என்ன காருண்யா இன்னைக்கும் ரெண்டு பேரும் லேட்டா வர்றீங்க? கொஞ்ச நேரம் முன்னாடி தானே சீக்கிரம் வாங்கனு சொல்லிட்டு வந்தேன். நாளைலேர்ந்து டைம்க்கு வரலன்னா பனிஷ்மண்ட் தான். பாத்துக்கோங்க” என்றார்.

“சாரி மேடம். இனிமே சீக்கிரம் வந்தர்றோம்” வழக்கம் போல தப்பிக்க முயன்றாள் காருண்யா.

“ப்ரேக்பாஸ்ட் முடிஞ்சதும் ரெண்டு பேரும் எங்கயும் போகக்கூடாது. இங்கயே நில்லுங்க. கொஞ்சம் பேசணும்”

“ஹும்ம் ஓகே மேடம்”என்று தலையசைத்தபடி கயலிடம், “வா போய் லைன்ல நிப்போம். ப்ரேயர் முடிஞ்சதும் நமக்கு இருக்கு” என்றாள்

கயலும் காருண்யாவை பின்தொடர்ந்து வரிசையில் நின்றாள்.


குழந்தைகளை வரிசைப் படுத்திவிட்டு எதிர்ப்புறம் சென்று நின்றார் மீனா.

அனைவரும் சரஸ்வதி மேடத்திற்காக காத்திருந்தனர். யார் இவர்?

சரஸ்வதி.
கடந்த பதினைந்து வருடங்களாக தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் கேட்பாரற்றுக் கிடந்த பச்சிளம் குழந்தைகளை ஒன்று சேர்த்து நந்தவனம் என்னும் காப்பகம் உருவாக்கியவர். அங்கே பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு மன நிறைவு கொள்பவர்.

சில நிமிடங்களில் சரஸ்வதி மேடம் வர அவருக்கு அனைவரும் உரக்க வணக்கம் வைத்தனர்.

“குட் மார்னிங் மேடம்”

“குட் மார்னிங் ஆல். ஹௌ ஆர் யூ ஆல்?”

“வி ஆல் ஆர் ஃபைன். ஹௌ ஆர் யூ மேடம்?”

“குட். ஐ ஆம் ஃபைன்”

இதுவும் வழக்கமே.

சரஸ்வதி அங்கே நின்றிருந்த மீனாவை நோக்கி பார்வையைத் திருப்பினார். அவரது பார்வை திரும்பிய அடுத்த நொடி மரியாதை நிமித்தமாய் மீனா சரஸ்வதி அருகில் வந்து பேசினார்.

“மேடம்! எல்லாரும் வந்தாச்சு ப்ரேயர் ஸ்டார்ட் பண்ணிடலாமா?”

“இன்னிக்கு டொனேஷன் தர்றவங்க வந்துட்டாங்களா?”

“இன்னுமில்ல மேடம். கால் பண்ணேன். ஹெவி ட்ராஃபிக். வர கொஞ்சம் லேட் ஆகும். நீங்க ப்ரேயர ஸ்டார்ட் பண்ணுங்க. நாங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்னு சொன்னாங்க மேடம்”

“அப்ப சரி. நம்ம ப்ரேயர் ஸ்டார்ட் பண்ணிடலாம்”

மீனா கைகளைக் கூப்பி கடவுள் வாழ்த்துப் பாட… அவருடன் இணைந்து அனைவரும் பாடத் தொடங்கினார்.



அத்தியாயம் – 4

கடவுள் வாழ்த்து முடிந்ததும்…

காப்பக வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. காரின் ஹாரன் சத்தம் கேட்டதும் சரஸ்வதி விரைந்து சென்று வாசலில் நின்றார், வரவேற்க ஆயத்தமாய்.

வரிசையின் கடைசியில் நின்றிருந்த கயல் எக்கி எக்கிப் பார்த்தாள். கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பார்வையை செலுத்தினாள். இருப்பினும் வாசல் முழுமையாய் தெரியவில்லை. ஆர்வம் தாங்காமல் தன் நுனி விரலால் காருண்யாவை பின்புறத்திலிருந்து சுரண்டினாள்.

“அக்கா… அக்கா…”

“உஷ்ஷ்ஷ்… அமைதியா இரு”

“அக்கா… எனக்கு ஒன்னுமே தெரில. மறைக்குது.”

“எனக்கும் தெரியல கயலு. ஃபரன்ட்ல போய் நிப்போம் வா”

இருவரும் சத்தமின்றி முதல் வரிசையில் சென்று கலந்தனர்.

“இப்ப தெரியுதா?”

“ம்ம்ம் க்கா…”

காரின் முன்பக்க கதவைத் திறந்து கொண்டு பிரேம் இறங்கினான். இளஞ்சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்து… பார்க்க பளிச்சென்று இருந்தான். காரிலிருந்து இறங்கி பின்பக்க கதவைத் திறந்தபடி நின்றான். விஷேசமாக இளஞ்சிவப்பு வண்ண புடவை அணிந்து புன்னகை பூத்த வண்ணம் பவி இறங்கினாள். பவியின் சுண்டுவிரல் பிடித்தபடி அவர்களது செல்ல மகளும் இறங்கினாள். அவளுக்கும் பொருத்தமாய் இளஞ்சிவப்பு வண்ண உடை தான்‌ என்றால் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மூவரையும் வாசலில் நின்றிருந்த சரஸ்வதி வரவேற்றார்.

“குட் மார்னிங் சார்! யூ ஆர் மோஸ்ட் வெல்கம். ஐ ஆம் சரஸ்வதி”

“குட் மார்னிங் மேடம்! ஐ ஆம் பிரேம்குமார். ஷீ இஸ் மை வைஃப் பவித்ரா. அன்ட் ஷீ இஸ் மை டாட்டர்”

“ஓ! ஹாய் மேடம்… நைஸ் டு மீட் யூ. ஐ ஆம் சரஸ்வதி” எனும் சரஸ்வதியின் வரவேற்பிற்கு “ஹெலோ மேடம்!” என்றபடி புன்னகைத்தபடி கைக் குலுக்கினாள் பவி.

“பாப்பா! மேடம்க்கு குட் மார்னிங் சொல்லுங்க” தன் மகளிடம் சொன்னாள்.

“குட் மார்னிங் பேபி! உங்க பேர் என்ன?”

“ஷாலினி”

“நைஸ் நேம். உங்களுக்கு இன்னைக்கு பர்த்டேவா?”

“ம்ம்ம்… ஆமா. இன்னிக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே”

“விஷ்ஷிங் யூ எ வெரி ஹேப்பி பர்த்டே ஷாலினி பேபி” ஷாலினி பாப்பாவின் பிஞ்சு விரல்களைப் பிடித்துக் கைக் குலுக்கினார்.

இன்று அவளுக்கான நாள் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்து விட்டது.

“தேங்க் யூ” கிளுக்கென்று சிரித்துக் கொண்டாள் ஷாலினி.

சரஸ்வதி மேடம் தன் பேச்சை பிரேம் பக்கம் திருப்பினார்.

“சார், ப்ரேயர் ஓவர் சார். செலிப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம்”

“யா! ஸ்யூர் மேடம்”

தன் மனைவி மகளுடன் அவரை பின்தொடர்ந்தான்.


வழிபாட்டுக் கூடத்தை அடைந்ததும் சரஸ்வதி தன் இடத்திற்கு சென்று நின்றார்.

அனைத்து குழந்தைகளின் கண்களும் அவரை பின் தொடர்ந்து வரும் பிரேம், பவி, ஷாலினியின் மீதே இருந்தன. ஷாலினியின் உடை, அலங்காரம் கண்டு கயலின் கண்கள் பெரிதாய் விரிந்தன. அவளது கண்களின் மேலிமை கீழிமையை தொட்டுச் செல்ல அடம் பிடித்தது.

ஷாலினி பவியின் விரலைப் பிடித்தபடி எல்லோரையும் வியந்து பார்த்துக் கொண்டே வந்தாள்.

இப்போது சரஸ்வதி மேடம் உரையாற்றினார்.

“பிள்ளைகளா! இன்னைக்கு நம்ம ஹோம்க்கு ஸ்பெஷல் கெஸ்ட் வந்திருக்காங்க. பிரேம் குமார் சார், பவித்ரா மேடம் அன்ட் அவங்க டாட்டர் ஷாலினி. லெட் அஸ் வெல்கம் தெம்”

சரஸ்வதி மேடத்தின் அருகில் நின்றுக் கொண்டிருந்த மீனா மேடம் கைத்தட்டினார்.
அவரைத் தொடர்ந்து குழந்தைகள் கரகோஷம் எழுப்பினர்.

இது வழக்கமே. மீனா எப்பொழுதெல்லாம் கைத்தட்டுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவரோடிணைந்து கைத்தட்டி கரகோஷம் எழுப்ப வேண்டுமென்பது அனைத்து குழந்தைகளின் மனதிலும் பதிந்து போன ஒன்று.

சரஸ்வதி உரையைத் தொடர்ந்தார்.

“இன்னைக்கு ஷாலினியோட பர்த்டே. அதனால பிரேம் குமார் சார் அன்ட் ஃபேமிலி நம்ம ஹோம்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்காங்க. நம்ம ஹோம் சார்பாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைத்தட்டி மகிழ்வோம்”

மீண்டும் கரகோஷம்.

“இன்னைக்கு அவங்க பொண்ணு பர்த்டேவ நம்ம கூட செலிப்ரேட் பண்ணனும்னு விருப்பப்படுறாங்க. நம்ம ஹோம் சார்பாக ஷாலினி எந்த குறையுமின்றி ஆனந்தமாய் ஆரோக்கியமாய் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்”

தன் உரையை முடித்துவிட்டு சரஸ்வதி மேடம் பிரேம் அருகில் சென்று, “செலிப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிடலாமா சார்” என்றார்.

“ஸ்டார்ட் பண்ணிடலாம் மேடம்” என்று பவ்வியமாய் தலையாட்டினான்.



அத்தியாயம் – 5

கூடத்தின் ஓர் மூலையில் அலங்கரிக்கப்பட்ட மேசை தயாராய் இருந்தது. அதன்மேல் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து அரிய வகை பொம்மை ஒன்று காத்துக் கொண்டிருந்தது.

ஷாலினிக்கு பார்பி டால் என்றால் கொள்ளைப் பிரியம். வீட்டில் அவளுக்கென்றே ஒரு பார்பி. அதற்கு உடை மாற்றுவது, போனி டெயில் போடுவது, ஒப்பனை செய்வது என வாரத்தில் ஷாலினியின் ஒரு நாள் கரைந்து விடும்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் அவ்வரிய வகை பொம்மை பார்பி டால் தான். தன் மகளுக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யும் பிரேமும் பவியும் கேக் கட்டிங் செலிப்ரேஷனை மட்டும் எளிதாய் விட்டு விடுவார்களா என்ன? தன் மகளின் பிரியமான பார்பி டால் உருவிலே கேக் ஆர்டர் செய்திருந்தான், பிரேம்.

மேசை கூடத்தின் மையத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

பார்பி டாலை பார்த்ததும் குழந்தைகளுக்குள் சலசலப்பு…

“ஏய்! பொம்ம பாருடீ…”

“எவ்ளோ அழகா இருக்கு…”

“இது பொம்மயில்ல… கேக்கு…”

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கயலின் புருவம் உயர்ந்தது.

“என்னது… கேக்கா….?” – ஆச்சரியப்பட்டு கத்தினாள்.

“ஸைலன்ஸ்… கீப் கொய்ட்” – சத்தம் கேட்டு மீனா மேடம் கண்டித்தார்.

அவரது குரலையும் மீறி அங்கு சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது.

இப்பொழுது நம் கயல் காருண்யாவை அழகான இம்சை செய்யாமல் விடுவாளா என்ன?

“ஸ்ஸ்ஸ்…. ஸ்ஸ்ஸ்… அக்கா”

“என்ன?”

“இது கேக்கா? பொம்மயில்லியா?”

“பொம்ம மாதிரியே கேக் பண்ணியிருக்காங்க கயலு! இந்த பொம்ம பேரு பார்பி… ரொம்ப ரிச் பீப்பில்ஸ் எல்லாம் வெச்சிருப்பாங்க”

“அப்டீயா…? அப்போ இத கட் பண்ணுவாங்களாக்கா?”

“ம்ம்ம்… இத கட் பண்ணி சாப்டலாம். வெயிட் பண்ணுவோம். தருவாங்க”

“ம்ம்ம்”


சில நிமிடங்களில் பிரேம், பவி, ஷாலினி மூவரும் மேசையருகே வந்து நின்றனர்.

தனது பிரியமான பார்பியை பார்த்ததும் ஷாலினியின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.
“ஐ! பார்பி டால்… என்னோட ஃபேவரைட்!”
அவளது முதுகில் தட்டிக்கொடுத்துப் புன்னகைத்தான், பிரேம்.

மூவரையும் சுற்றி சரஸ்வதி மேடம், மீனா மேடம், குழந்தைகள் என எல்லோரும் வந்து நின்றாயிற்று. பிரேம் தன் கையில் வைத்திருந்த கத்தியை பவியிடம் கொடுத்தான். தன் மகளின் பிஞ்சுவிரல்கள் கத்திக் கூர்நுனியால் காயப்படாத வண்ணம் ஷாலினியின் கையில் கத்தியைக் கொடுத்து மெல்ல அணைத்துக் கொண்டாள் பவி.கத்தியையும் ஷாலினியின் விரல்களையும் கவனமாய் பிடித்தபடி பார்பி டாலைத் துண்டித்தாள்.

“ஹேப்பி பர்த்டே டூ யூ! ஹேப்பி பர்த்டே டூ யூ! மே காட் ப்ளேஸ் யூ!…….” – வாழ்த்துக்கள் பாடல் வழியே சில மணித்துளிகள் கூடம் முழுதும் எதிரொலித்தன.

அதுவரை ஆடம்பரமான உடையணிந்து ஒய்யாரமாய் நின்றிருந்த பார்பி சில நொடிகளில் துண்டு துண்டுகளாய் காகிதத் தட்டுகளில் பரிமாறப்பட்டது. குழந்தைகளின் கையையடைந்து மோட்சம் பெறத் தொடங்கியது.

“காரு அக்கா… ரொம்ப நல்லா இருக்குல்ல..?”

“ஆமா கயலு! இதே மாதிரி டெய்லியும் யாராச்சும் கேக் குடுத்தா எப்டி இருக்கும்?” – கேக் துண்டின் ருசி காருண்யாவை பேச வைத்தது.

“நாளைக்கி எங்க அம்மா அப்பாவும் இப்டித்தான் பார்பி டால் வாங்கித் தருவாங்க”

“என்ன ஒளறுற கயலு? ஒன்னுமே புரியல…”

“சில்ட்ரன்ஸ்! கோ அண்ட் ஸ்டான்ட் இன் லைன். எல்லாரும் வரிசையா டைனிங் ஹால் போங்க. பாஸ்ட்… பாஸ்ட்…” – மீனா மேடத்தின் கட்டளைக் குரல் குறுக்கிட்டது.

“சரி வா… லைன்ல நிப்போம்”

கயல் தான் சுவைத்த பாதி கேக் போக மீதியை கையில் ஏந்தியபடி காருண்யாவின் பின்னால் சென்று வரிசையில் நின்றாள். மீதி கேக் சுவைத்துக் கொண்டே உணவுக் கூடத்தை அடைந்தாள்.



அத்தியாயம் – 6

பவியும் ப்ரேமும் வழிப்பாட்டுக் கூடத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

“பவி, நீ பாப்பாவ கூட்டிட்டு டைனிங் ஹால் போய் வெயிட் பண்ணு. நானும் குமாரும் டிஃபன் கேரியர் எடுத்துட்டு வரோம்”

“சரி, நீ வா. நாங்க போறோம். லேட் பண்ணிடாத”

“ஓக்கே! ஓக்கே! நீங்க போங்க… ஏதாச்சும்னா அப்டேட் பண்ணு”

ஷாலினியை அழைத்துக் கொண்டு உணவுக்கூடம் சென்றாள்.


பிரேம் தன் டிரைவர் குமாரை அலைபேசியில் அழைத்தான்.

“ட்ரிங்…. ட்ரிங்….”

“சார், இதோ வந்துட்டே இருக்கேன் சார்”

“சாப்பாடு பேக் பண்ணி வாங்கிட்டிங்களா குமார்?”

“வாங்கிட்டேன் சார்… வாங்கிட்டேன் சார்…”

“முப்பத்தஞ்சு பேருக்கு ஆர்டர் பண்ணியிருந்தேன். என்ன என்ன ஐட்டம்ஸ்னு வாட்ஸாப் பண்ணியிருந்தேன். ப்ராப்பரா செக் பண்ணீங்களா?”

“செக் பண்ணிட்டேன் சார். நாலு பெரிய கேரியர்ல ஃபில் பண்ணி வாங்கிட்டேன் சார். நீங்க கவலையே படாதீங்க. ரிலாக்ஸ்டா இருங்க சார். நான் உள்ள எடுத்துட்டு வர்றேன்”

“ஒகே! நீங்க இப்ப எந்த எடத்துல வந்துட்டு இருக்கீங்க?”

“நான் ஹோம் எண்ட்ரன்ஸுக்கு வந்துட்டேன் சார்”

“இருங்க. நானும் வர்றேன். ரொம்ப ஹெவியா இருக்கும்”

“இருக்கட்டும் சார். நீங்க வரவேண்டாம். நான் பாத்துக்குறேன்”

குமார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரேம் வாசலை அடைந்தான். அலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு சொன்னான்…..

“என்ன குமார்? நாலு கேரியர ஒரேயடியா தூக்குற அளவுக்கு நீங்க பெரிய பயில்வான்னு இத்தன நாள் எனக்கு தெரியாம போச்சே!”

பிரேமின் நகைச்சுவையான கிண்டலுக்கு குமார் சிரித்தான்.

“இல்ல சார்… உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான்….”

“சிரமமா? எனக்கா? ஹா ஹா! கம் ஆன் மேன்… உங்க அளவுக்கு நாலு கேரியர் தூக்க முடியலனாலும் ரெண்டு கேரியர் தூக்குவேன்”

“ஹா ஹா! சார், நீங்க எப்பையுமே இப்டிதான் சார். கேக் கட்டிங் ஓவரா சார்?”

“யா! எல்லாரும் பிரேக் ஃபாஸ்டுக்கு தான் வெயிட்டிங். கம். லெட்ஸ் கோ”

இருவரும் ஆளுக்கிரண்டு கேரியர் தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.

குழந்தைகளுக்கு தோசை, இட்லி, சட்னி, சாம்பார், பொங்கல், கேசரி என விதவிதமாய் காலை உணவு பரிமாறப்பட்டது. இன்று இவ்வுணவு தன் தட்டுக்கு வந்தடைய காரணமாயிருந்த ஒவ்வொரு ஜீவனுக்கும் நன்றி தெரிவித்தும் இறைவனை வணங்கியும் உண்ணத் தொடங்கினர்.


ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது. சரஸ்வதி மேடத்திடமிருந்து விடைபெற்று பிரேம், பவி, ஷாலினி மூவரும் நான்கு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஷாலினியின் மனதில் வரிசையாய் கேள்விகள் உதிக்கத் தொடங்கின. ஒவ்வொன்றாய் கேட்கத் தொடங்கினாள்.

“அப்பா”

“சொல்லுடா பாப்பா”

“இப்போ நம்ம போனது யார் வீடுப்பா?”

“ஹா ஹா! அது வீடு இல்ல பாப்பா. ஆர்பனேஜ்”

“ஆர்பேஜா???? ஹான்ன்ன்…”

“குழந்தைகள் காப்பகம்டா பாப்பா. இப்போ உன் கூட அம்மாவும் நானும் இருக்கோமா”

“ஆமா”

“அவங்களுக்கு அம்மா, அப்பா இல்ல. அதனால அவங்க எல்லாரையும் நல்லா பாத்துக்குற எடம் தான் ஆர்பனேஜ்”

“ஓ!”

“புரிஞ்சிச்சா”

“எஸ்ப்பா…”

“நாம உன்னோட பர்த்டேக்கு ஏன் அங்க போனோம்னு சொல்லு பாப்போம்”

“ஆங்ங்ங்…. கண்டுபிடிச்சிட்டேன்”

“சொல்லுங்க பாப்போம்”

“அவங்களுக்கு மம்மி டாடி இல்லல… அதனால மம்மி டாடிய காட்டிட்டு வரப் போனோம்”

ஷாலினியின் விளக்கம் பிரேம் பவி இருவருக்கும் அதிர்ச்சியளித்தது. பிரேமின் மனதில் சுருக்கென்று முள்ளாய் குத்தியது.

லல்லியிடம் பொம்மை இல்ல காட்டிட்டு வரேன்… லல்லியிடம் பேனாவை காட்டிட்டு வரேன்… இவ்வாறு சொல்லி பழகியவள், அதே எண்ணத்தில் தன் தாய் தந்தையை மற்ற குழந்தைகளிடம் காட்டி விட்டதாய் எண்ணி சந்தோஷம் அடைவதை நினைத்து வருந்தினான்.

மற்ற குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும் என்றெண்ணத் தொடங்கினான். அவன் பவியின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவளது கண்கள் “நான் தவறு செய்து விட்டோமோ?” என்று அவனிடம் கேட்பதுபோல் இருந்தது.

அதற்குள் ஷாலினியின் இவ்வெண்ணம் எதிர்காலத்தில் தலைக்கனமாய் மாற வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொண்டாள் பவி. அவளது எண்ணத்தை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

“இல்ல பாப்பா. உனக்கு அம்மா, அப்பா இருக்கோம். டெய்லி சாப்பாடு தருவோம். நல்ல டிரஸ் தருவோம். அவங்களுக்கு அம்மா, அப்பா இல்லல்ல. அவங்களுக்கு யார் தருவா? அதனால நம்ம அவங்களுக்கு நல்ல டிரஸ் சாப்பாடு கிடைக்க ஹெல்ப் பண்ணிட்டு வரோம். புரிஞ்சுதா?”

“ஓ! ஹெல்ப் பண்ணோமா ம்மா?”

“ஆமாடா… நீயும் பெரியாளாகி இந்த மாதிரி நிறைய நல்லது பண்ணனும்”

“ஓகே… ம்மா”

தன் கேள்விகளுக்கு பதில் கிட்டியதால் தலையாட்டிவிட்டு, ஜன்னல் வழியே பின் நோக்கி நகரும் மரங்களை எட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.



அத்தியாயம் – 7

பிரேம், பவி, ஷாலினி காப்பகம் விட்டு வெளியேறிய பின்…

நந்தவனத்தில்…

சரஸ்வதி மேடம் தன் அறைக்கு சென்று நாற்காலியில் அமர்ந்தார். அவருடன் மீனா மேடம் சென்றார்.

“மேடம், இன்னைக்கு யார் ப்ரேயருக்கு லேட்?” -மீனா மேடத்திடம் சரஸ்வதி மேடம் கேட்கவே,
“அஸ் யூஷ்வல் காருண்யாவும் கயலும் தான் மேடம். தினமும் லேட் பண்றாங்க ரீசன் எதுவும் வேலிடா இல்ல” என பதிலளித்தார்.

“கால் தெம்”

“காருண்யா… கயல கூட்டிட்டு உள்ளே வா”

மீனா அழைத்ததும் அறையின் வாயிலில் நின்றிருந்த காருண்யாவிற்கு பயத்தில் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.

“போச்சு! இன்னைக்கு பஞ்சாயத்து இருக்கு. எல்லாம் உன்னாலதான்” கயலை நோக்கி காருண்யா சீறினாள்.

காருண்யா உள்ளே செல்ல, அவள் பின் தன்னை மறைத்துக் கொண்டு பூனைபோல் அடியெடுத்து வைத்தாள் கயல்.

உள்ளே சென்றதும்…

“ஏன் ரெண்டு பேரும் டெய்லி லேட் பண்றீங்க? கருண்யா… மார்னிங் எத்தன மணிக்கு ரெண்டு பேரும் எந்திரிக்கிரீங்க?”

இருவரில் மூத்தவள் காருண்யா என்பதால் முதல் தாக்குதல் எப்போதும் அவளுக்குத் தான்.

“நான் ஆறு மணிக்கு எந்திரிச்சேன் மேடம்”

“இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சுமா லேட் ஆகுது? கயல்… அப்போ நீ தான் லேட் பண்றியா?”

அதுவரை காருண்யாவின் பின் பம்மிக்கொண்டு நின்றவள் தலை கவிழ்ந்தபடி மெல்ல முன் வந்து நின்றாள்.

“அப்படி என்னதான் பண்ற நீ காலையில? ஏன் இவ்வளவு லேட்?”

“மேடம்… அவ தெனமும் கனா காண்றா”- குறுக்கிட்டாள் கருண்யா

“கனவா? என்ன சொல்ற?”

“ஆமா மேடம். டெய்லி கனா கண்டுட்டு லேட்டா தான் எந்திரிக்கிறா. இன்னைக்கு கூட அம்மா எங்கனு கேட்டா மேடம்”

“ஆமா! ஆமா! இன்னைக்கு எங்க அம்மா வந்தாங்க” – கயலின் குரலில் உற்சாகம் தெரிந்தது. இது சரஸ்வதி மேடம் சற்றும் எதிர்பாராத ஒன்றாய் இருந்தது.

“கயல் கிட்ட வா… இன்னைக்கு அம்மா வந்தாங்களா?”

“ஆமா… ஆமா…”

“சரி. வந்து என்ன சொன்னாங்க?”

“ஹேப்பி பர்த்டே டூ யூ செல்லம்னு சொன்னாங்க மேடம்”

“அப்போ நாளைக்கும் வருவாங்களா?”

“ஆமா. நாளைக்கும் வருவாங்க. அம்மா அப்பா ரெண்டு பேருமே வருவாங்க”

“ஓ!”

“எனக்கு பார்பி டால் கூட வாங்கிட்டு வருவாங்க”

கொஞ்சி கொஞ்சி அவள் சொல்லும் அழகு இவளது அழகான கனவுகள் நனவாகக் கூடாதா என தோன்ற வைத்தது. சரஸ்வதி மேடத்தின் மனதை சிறு கவலை பற்றிக் கொண்டது. தொண்டைக் குழியில் ஏதோ அடைப்பது போல் இருந்தது.

இருப்பினும் சரிசெய்து கொண்டு,
“சரி, இனிமே ரெண்டு பேரும் கரக்ட் டைமுக்கு ப்ரேயருக்கு வந்துடனும். இப்ப போங்க…” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.



அத்தியாயம் – 8

இத்தனை நாட்களாய் கயலின் ஆழ்மனதின் ஏக்கங்களே கனவுகளாய் உருவெடுத்து அவளை மனநிறைவுக் கொள்ள செய்துள்ளன என்னும் உண்மை சரஸ்வதியை வேதனைப்படுத்தியது.

சில நிமிடங்கள் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தார். தன் நந்தவனத்தில் மொட்டு ஒன்று மலரும் முன்பே வாடிக் கொண்டிருப்பது மிகுந்த வலியாய் இருந்தது. இன்னும் எத்தனை மொட்டுக்கள் மலர்ந்தும் வாடுகின்றனவோ என்று எண்ணலானார். நினைக்கையில் தொண்டையடைத்தது.

நந்தவனம் வருபவர்கள் கேக், சாப்பாடு என்று கொடுப்பதால் குழந்தைகளின் வயிறு நினைகின்றது. ஆனால் மனம்?… அவரது மனமே அவரை பல கேள்விகள் கொண்டு சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருந்தது.

அந்நேரம் மேசைமேல் இருந்த அலைபேசி அவரது மௌனத்தை உடைக்க முயற்சித்தது. அவரது மனக் கேள்விகளுக்கு பதில் தேடி நிஜவுலகை மறந்து போனார். அதுவரை அவரது மௌனத்தைக் கலைக்க இயலாது அருகிலேயே நின்ற மீனா இப்போது அழைத்தார்.

“மேடம்! ஃபோன் கால்….”

“ஓ! ஸாரி மீனா… கவனிக்கல…”

அழைப்பை ஏற்றார்.

“ஹலோ!”

“———“

“ஆமா நீங்க?”

“———“

“யா யா! ஞாபகம் இருக்கு சார். பட்… ஸாரி டு ஸே திஸ் இன் லாஸ்ட் மினிட்… இப்போ எங்க ஹோம்ல சின்ன சேன்ஜ் கொண்டு வந்திருக்கோம். கேக் கட்டிங் செலிப்ரேஷன் மட்டும் இனி இல்ல. மத்தபடி நீங்க விருப்பப்பட்டா ஃபுட், ட்ரெஸஸ், டொனேஷன் கொடுக்கலாம்”

“——–“

“தேங்க் யூ!”

அலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு மீனாவை பார்த்தார். மீனா கண்களை மெலிதாய் இமைத்துப் புன்னகைத்தார். சரஸ்வதியின் தற்போதைய மனநிலை புரிந்து கொள்ள அலைபேசி உரையாடல் மீனாவிற்கு போதுமானதாய் இருந்தது.

“மேடம், வாட்ஸ் நெக்ஸ்ட்?” என்றார் மீனா.

“சொல்றேன். இன்னும் நியூ இயர்க்கு ஃபைவ் டேஸ் தான் இருக்கு. நம்ம இந்த நியூ இயர்ல இருந்து ஒரு சின்ன சேன்ஜ் கொண்டு வரப் போறோம்”

“என்ன சேன்ஜ் மேடம்?” ஆர்வம் தாங்காமல் மீனா கேட்டார்.

தன் மேசை ட்ராவைத் திறந்து பதிவேடு ஒன்றை எடுத்தார்.

“மீனா, இதுல நம்ம ஹோம்க்கு குழந்தைங்க என்ன என்ன தேதில வந்தாங்கனு இருக்கு. இனிமே அவங்களோட பர்த்டே செலிப்ரேஷன் கணக்கு வழக்கு உங்க பொறுப்பு. நெஸ்ட் யார் பர்த்டேனு பார்த்து சொல்லுங்க”

பதிவேட்டுப் பக்கங்களில் உள்ள தேதிகளை மீனாவின் ஆள்காட்டிவிரல் வருடத் தொடங்கியது. 05-01-2015 தேதி வந்ததும் பெயரைத் தொட்டபடி சிலையாய் நின்றது.

“மேடம் ஒரு நிமிஷம்” மீனா சரஸ்வதியை அழைத்தார். மீனாவின் உதடுகள் புன்முறுவலுடன் காணப்பட்டது.

“என்ன ஆச்சு மீனா? எனி ப்ராப்ளேம்?” – என்றபடி சரஸ்வதி மீனாவின் கைகளிலிருந்து பதிவேட்டை வாங்கிப் பார்த்தார். இப்போது அதே புன்முறுவல் சரஸ்வதியின் உதடுகளையும் தொற்றிக் கொண்டது.

காரணம்……

‘கயல்விழி’ – மீனாவின் விரல் சிலையாய் மாறி நகர மறுத்து நிற்கும் பெயர்.

— நந்தவனம் இனி பூத்துக் குலுங்கும்🌹🌹🌹

–முற்றும்

Leave a comment