போதுமென்ற மனமே!

கவிஞர்கள் பலர் பெண்களின் அழகோடு ஒப்பிட்டு வர்ணிக்கும் மிகவும் அழகான பறவை. நடனம் என்றாலே இப்பறவைதான் நம் நினைவுக்கு வரும். இந்நேரம் உங்கள் நினைவில் உதித்திருக்கும். ஆம், மயில் தான்.

அவ்வளவு அழகுக்கூடிய மயிலுக்கு பிரம்மாவின் மேல் ஏனோ கோவம். “இப்போது என் குறைகளை கேட்க பிரம்மன் வர வேண்டும். என் மனதில் உள்ளதைக் கேட்டே ஆக வேண்டும்” என்று எண்ணி பிரம்மனை வேண்டியது. அதன் முன் பிரம்மன் தோன்றினார்.

“என்னை அழைத்ததன் காரணம் என்ன?” – என்று மயிலிடம் கேட்டார்.

“வணங்குகிறேன் பிரம்மதேவா! வெகுநாட்களாக என் மனதில் உள்ள குறைபற்றிக் கேட்கவே அழைத்தேன்” என்றது மயில்.

“சரி! நீ கேட்க விரும்பியதைக் கேள்” என்றார்.

அதற்கு மயில், “ஓர் அற்ப பறவையான குயிலுக்கு எவரும் பரவசம் அடையக்கூடிய குரலைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் எனக்கு நல்ல குரல் கொடுக்கவில்லை. எல்லா பறவைகளும் என் குரல் கேட்டு சிரிக்கின்றன. எனக்கு அவமானமாக உள்ளது. குரலை தான் இப்படி கொடுத்தீர்கள். சரி. பறக்கும் திறனையாவது முழுமையாய் கொடுத்திருக்கலாம். அதையும் பருந்திற்கு கொடுத்துவிட்டீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று பிரம்மனிடம் புலம்பியது.

“சற்று பொறு” என்றபடி பிரம்மன் குயிலை அழைத்தார். “குயிலே! நான் உன்னை படைக்கும்போது ஏதேனும் குறை வைத்துவிட்டேனா? உனக்கு என்மேல் ஏதேனும் கோவமா?” என்றார்.

“இல்லை. எனக்கு தான் அற்புதமான குரலைக் கொடுத்திருக்கிறீர்களே. நான் கூவும்பொழுது என் குரலின் இனிமையில் மானுடர்கள் மன அமைதி காண்கின்றனர். அது போதாதா?” என்றது.

“உன்னைக் கருமையாய் படைத்து விட்டேனே? அது உனக்கு மனக்குறையாய் இல்லையா? அதை நினைத்து நீ ஒரு நாள் கூட வருந்தியதில்லையா?” என்றார்.

“ஆம். மயில், கிளி போன்ற வண்ணம் நிறைந்த பறவைகளை காணும் போது ஆசையாய் இருக்கும்” என்றது.

“பிறகு ஏன் என்னிடம் வந்து முறையிடவில்லை?” என பிரம்மன் கேட்டார்.

அதற்கு குயில், “ஏன் முறையிட வேண்டும்? நான் அதை குறையாய் கருதவில்லையே. அழகாய் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவ்வளவு தான். இல்லாத அழகை எண்ணி எண்ணி இருக்கும் குரலின் அருமையை நான் மறக்க விரும்பமில்லை. எனக்கு அழகு இல்லைதான். ஆனால் இனிமையான குரல் இருக்கிறதே! அதனைக் கொண்டு நான் திருப்தி அடைகிறேன்” என்றது.

குயிலின் பதில் கேட்டு மயில் தலை குனிந்தது.

“சரி, நீ செல்!” என்று பிரம்மன் குயிலை அனுப்பிவிட்டு இப்போது மயிலிடம் பேசினார்.

“ஏய்! பேராசை பிடித்த பறவையே! நீ குறைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமே கிடையாது. நீ தோகை விரித்து ஆடும் அழகினை கவிஞர்கள் வர்ணிக்கின்றனர். உனக்கு அழகான உருவமும் கொடுத்து பல வண்ணங்கள் கொண்ட தோகைகளும் கொடுத்துள்ளேன். வேறு எந்த பறவையிடமும் இவ்வளவு அழகு கிடையாது. என்னால் எல்லா நல்ல குணங்களையும் ஒரே ஒரு ஜீவராசியிடம் கொடுக்க முடியாது. குயிலுக்கு குரலைக் கொடுத்திருக்கிறேன். பருந்துக்கு வேகத்தைக் கொடுத்திருக்கிறேன். கிளிக்குப் பேச்சையும் கழுகுக்கு பலத்தையும் கொடுத்திருக்கிறேன். அதுபோல தான் உனக்கும். அழகான உருவத்தைக் கொடுத்துள்ளேன். ஆனால் நீயோ போதவில்லை என்கிறாய். இனி குறைப்படுவதை விட்டு வாழப் பழகு. இல்லையேல் இருப்பதையும் பிடுங்கி கொள்வேன்” என்று பிரம்மன் மயிலை எச்சரித்து மறைந்தார்.

எவற்றையும் ஓர் அளவிற்குமேல் போதும் என்று ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் மனநிறைவு கொள்கிறார்கள். போதவேயில்லை என்ற மனவெண்ணம் கொள்பவர்கள் வாழ்வில் பெருமிதம் கொள்ள வேண்டிய அனைத்தையும் இறைவன் அளித்திருந்தாலும் மனநிம்மதியற்று வாழ்கிறார்கள்.

போதவில்லை என்ற எண்ணம் நம்மை ஒருபோதும் நல்வழிப்படுத்தாது. உதாரணத்திற்கு மனைவி “உடைகள் போதவில்லை, நகைகள் போதவில்லை, பணம் போதவில்லை” என்று எப்போதும் அதிருப்தி கொண்டிருந்தால் கடன் வாங்க விருப்பமே இல்லாத கணவனாய் இருந்தாலும் அவனை கடலளவு கடனில் தள்ளிவிடும்.

எவ்வளவு இருந்தாலும் இல்லை என்று அதிருப்திக் கொள்ள செய்யும் எண்ணங்கள் வருவது நம் மனித இயல்பு தான். இது போன்ற எண்ணங்களில் இருந்து வெளி வருவது எளிதானது அல்ல. ஆனால் சாத்தியமே.

எவ்வாறு சாத்தியம்?

இனி “போதவில்லை” என்ற எண்ணம் உதிக்கும்பொழுது நம்மிடம் நாமே கேட்போம். “எது போதவில்லை?”, “அது அவசியமான ஒன்றா?”, “அதற்கு பதிலாய் வேறு மாற்று நம்மிடம் ஏதுமில்லையா?”, “அது கிடைத்துவிட்டால் அத்துடன் நம் மனம் திருப்தி அடைந்து விடுமா??” – இப்படிப்பட்ட கேள்விகளை நம்மை நாமே ஒவ்வொரு முறையும் கேட்போம். நாட்கள் செல்ல செல்ல “போதவில்லை” என்கிற எண்ணம் மறைந்து “எனக்கு என்ன குறை?” என்று மனம் திருப்தி அடையத் தொடங்கும்.

Leave a comment