வலிகளே வலிமை தரும்!

சிறுமி ஒருத்தி தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்தின் மூலையில் இருந்த அச்செடி அவள் கண்ணில் பட்டது. சில நாட்களுக்கு முன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. “இதோ! இந்த செடியில இருக்குற புழு தான் இன்னும் கொஞ்ச நாள்ல பட்டாம்பூச்சியா மாறும். அதனால இத தொந்தரவு பண்ணாம விளையாடனும். புரிஞ்சுச்சுச்சா?”. இப்போது அந்த புழு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வம் வந்தது. விரைந்து சென்று பார்த்தாள்.

அன்று புழு இருந்த இடத்தில் இப்போது கூடு இருப்பதைக் கண்டாள். அக்கூடு அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் இரண்டு பாதிகளாய் பிரியத் தொடங்கியது. உள்ளே அழகான குட்டிப் பட்டாம்பூச்சி. கூட்டினை எதிர்த்து அதன் சிறகுகளை வெறித்தனமாக அடித்துக் கொண்டு வெளிவர முயற்சித்தது. அதனால் முடியவில்லை.

நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு பட்டாம்பூச்சியின் மேல் இரக்கம் வந்தது. அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணி அக்கூட்டினை தன் கையால் இரண்டாக பிரித்தெடுத்தாள். கூட்டிலிருந்து பட்டாம்பூச்சி எளிதில் வெளிவந்தது. ஆனால் வெளிவந்த உடனே அது தரையில் விழுந்து துடித்தது.

சிறிது நேரத்தில் அது பறக்கத் தொடங்கும் என்றெண்ணி காத்திருந்தாள். அதனால் ஏனோ பறக்க முடியவில்லை. தரையில் கிடந்த பட்டாம்பூச்சியை எடுத்துக் கொண்டு தன் அம்மாவிடம் ஓடினாள். அம்மா என்ன நடந்தது என்று கேட்டார். கையிலிருந்த பட்டாம்பூச்சியைக் காட்டி நடந்தவற்றை கண்ணீர் மல்க சொன்னாள். “அம்மா இதை எப்படியாவது பறக்க வையுங்கள்” என்றாள் பாவமாக.

உண்மை அறியாமல் தன் மகள் அழுவதை புரிந்துகொண்டு அம்மா சொன்னாள். “நீ பட்டாம்பூச்சிக்கு உதவவே முயற்சித்தாய். ஆனால் நீ என்ன தவறு செய்துள்ளாய் என்பது உனக்கு புரியவில்லை. பாட்டம்பூச்சி கூட்டினுள் இருக்கும் போது அதன் இறகில் உள்ள தசைகள் வலுவானதாய் இருக்காது. அது கூட்டைவிட்டு வெளிவரும்போது கூட்டிற்கு எதிராக சிறகுகளை அடிப்பதால் சிறகுகள் முழுதும் இரத்தம் பரவி தசைகள் வலுவாக வளரும். அதனால் பட்டாம்பூச்சி கூட்டினை எதிர்த்து தனியாக போராடுவது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இப்போது நீ இப்பட்டாம்பூச்சி உயிர்வாழத் தேவையான தசைகள் வளர்வதை தடுத்துவிட்டாய். அதற்கு எப்படி பறக்க வேண்டும் என்று தெரியவில்லை”

இப்போது தன் தவறு சிறுமிக்கு புரிந்தது.

பட்டாம்பூச்சிக்கு மட்டுமல்ல … சில நேரங்களில் நமக்கும் வாழ்வில் போராட்டங்கள் தேவையானவையே. போராட்டங்களே இல்லாத வாழ்க்கை நம்மை அடியோடு முடக்கிவிடும்.

நாமும் வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டத்தில் வலிகளை அனுபவித்திருப்போம்.

உதாரணத்திற்கு…

மனதிற்கு நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது உயிரிழப்பு, உடல் ஆரோக்கியம் பாதிப்பு, காதல் தோல்வி, தேர்வுகளில் தோல்வி, வேலையின்மை, பண நெருக்கடி, கடன்தொல்லை, ஒரு வேளை உணவிற்குகூட வழி இல்லாத நிலை…

“ஆம், எனக்கும் இக்கஷ்டம் இருந்தது. நானும் வலிகளை அனுபவித்திருக்கிறேன்” என்று இப்போது மனதிற்குள் தோன்றுகிறதா? ஆம். நிச்சயம் தோன்றும். அதை எப்படிக் கடந்து வந்தோம் என்பதையும் யோசிப்போம்.

பிரச்சனைகள் என்றதுமே தொடக்கத்தில் எப்படி எதிர்கொள்வது என்று வழியறியாது குழப்பமோ தயக்கமோ அச்சமோ அல்லது அவநம்பிக்கையோ இருந்திருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ள முயற்சிக்கும் பொழுது தோல்விகள், அவமானங்கள், எதிர்ப்புகள் என பல வலிகளை அனுபவித்திருப்போம். அவ்வலிகளைத் தாங்கி போராட்டங்களை எதிர்கொண்டு வென்றும் இருப்போம்.

சிந்தித்து பார்த்தால்…  தனித்து நின்று போராடி கஷ்டங்களையும் வலிகளையும் கடந்துவந்த பின்பு நிச்சயம் நம் மனம் முன்பு இருந்த நிலையை விட இப்போது அதிக நம்பிக்கையும் தைரியமும் கொண்டிருக்கும். இனி வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள போதுமான அளவு வலிமையையும் பெற்றிருக்கும். வலிகள் இல்லாவிட்டால் போராடும் எண்ணமே இல்லாமல் போயிருக்கும் என்று தோன்றும்.

இனி, “என் வாழ்வில் ஏன் இவ்வளவு வலிகள், வேதனைகள்?” என்று தோன்றும் வேளையில் நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம் “இன்னும் வலிமை பெறுவதற்கே!” என்று.

“வலிகளே வலிமைகளாய்”

Leave a comment