
Yellowstone National Park-இன் மேற்கு நுழைவுவாயில் வழியாக Montana-விலிருந்து காலை 7:20 மணி வாக்கில் நுழைந்தோம்.
வானில் சூரியன் பிரகாசமாய் ஒளிர அவனை தன் அகன்ற நூறு கைகளால் மேல்நோக்கி வேண்டுவது போல் மரங்களெல்லாம் சாலையின் இருபுறமும் காட்சியளித்தன. இடது புறம் ஓடிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு ஆறு. பெயர் என்னவாக இருக்கும்? வரைபடத்தில் பார்ப்பதற்குள்ளே வண்டியும் நகர்ந்து விட்டது வரைபடத்தில் இடமும் நகர்ந்து விட்டது. என்னவாக இருந்தால் என்ன? சாலையின் கீழே புகுந்து வளைந்து வலதுபக்கம் ஓடிய அதன் அழகை பார்த்ததும் பெயர் பலகை பார்க்கவும் மறந்து போனேன். பெயர்ப்பலகை பார்த்து அவன் சொன்னான் “Madison River” என்று. கொஞ்ச தூரம் எங்களோடு பயணித்த அவ்வாறு அதன் பாதையை எங்கோ ஓரிடத்தில் மாற்றிக் கொண்டு கண்ணை விட்டு மறைந்தது. எங்கள் கவனமும் அடுத்தது கண்ணில் பட்ட காட்சிகளின் மேல் போக ஆரம்பித்தது.
குளிர்காலத்தில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து இங்கு புறப்பட்டு வர காரணம் ஒன்றே. சிங்கம், புலி, கரடி எல்லாம் பார்க்க ஆசைப்படும் சிறுபிள்ளைத்தனம் இன்னும் எங்களுக்குள்ளே இருப்பது தான். சிறுவயதில் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள்ளே பார்த்த விலங்குகளெல்ளாம் காட்டுக்குள்ளே திரிந்துக் கொண்டிருக்குமாம். மானிருக்கும் கரடியிருக்கும் நரியிருக்குமென்று முந்தைய நாள் வலைத்தளத்தில் படித்தவையெல்லாம் மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டிருந்தது. சாலையோரம் சற்று தூரத்தில் ஆங்காங்கே பலத்த இயற்கை காற்றிலோ அல்லது மழையிலோ முரிந்துக் கிடந்த மரங்களில் சிலவற்றை பார்க்கும்போது ஒரு வேலை மானாக இருக்குமோ என்று அவ்வப்பொழுது கண்கள் ஒரு நொடி திரும்பி திரும்பி என்னையும் மீறி ஜன்னல்வழியே பார்க்கத்தான் செய்தது. அவை மான்கள் இல்லையென்று உறுதியான பின்னரே சாலை மீது போனது. சில சமையம் சிறு கிளைகள் கூட மானின் கொம்புகள் போல தோன்றின. சில சமயம் வண்டியை வேகமாய் செலுத்திக் கொண்டிருந்த அவனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தேன். “அங்கிருப்பது மானா? இங்கிருப்பது மானா? பார்த்து சொல்லேன்” என்று.
“காலை நேரமும் மாலை நேரமும் விலங்குகள் இங்கு திறந்த வெளிகளில் சுதந்திரமாய் தெரியுமாம். அதனால் மரங்களுக்கு நடுவே தேடுவதை விட்டு திறந்த வெளிகளிலும் சாலையிலும் தேடிப் பார்ப்போம்” என்று அவன் சொல்லி முடிக்கத்தான் தாமதம்.
எங்கள் முன் சென்ற வாகனம் வேகம் குறைந்து நின்றது. பிறகு மெல்ல நகர்ந்தது. மீண்டும் நின்றது. பிறகு மீண்டும் நகர்ந்தது. “என்னடா இது? ஒன்று நிற்க வேண்டும் இல்லை நகர வேண்டும். இப்படி படுத்துகிறார்களே!” என்று பேசியபடி அவன் காரின் ஜன்னலை இறக்கிவிட்டு அவ்வாகனத்திற்கும் முன்னால் பார்த்தான். “Bison! Bison! Camera எடு” என்றான். கேமராவை வாங்கிக் கொண்டு காரின் இடதுபக்க ஜன்னல்வழியாக சில புகைப்படங்கள் எடுத்தான். பிறகு என்னிடம் கொடுத்து, “முழுதாய் எடுக்க முடியவில்லை. நீ எடுத்துப் பார்” என்றான். நானும் வலது பக்க ஜன்னல்வழியாக புகைப்படங்கள் பல எடுத்தேன். அதிலும் பைசன் முழுதாய் விழவில்லை. எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஒய்யாரமாய் உக்கார்ந்து ஜன்னலில் தலையை வைத்தவாறு வெளிக்காற்று வாங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று பைசனை பார்த்ததும் தலையை உயர்த்தி வேடிக்கைப் பார்த்தபடியே எங்களை கடந்து சென்றது.
எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஒய்யாரமாய் உக்கார்ந்து ஜன்னலில் தலையை வைத்தவாறு வெளிக்காற்று வாங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று பைசனை பார்த்ததும் தலையை உயர்த்தி வேடிக்கைப் பார்த்தபடியே எங்களை கடந்து சென்றது.
சில நிமிடங்களில் முன்னிருந்த கார் மெல்ல மெல்ல நகர்ந்து இடதுபக்கமாய் பைசனை கடந்து செல்லத்தொடங்கியது. இப்போது எங்கள் முறை. சாலையின் நடுக்கோட்டில் பைசன். அது எப்போது நகர்ந்து வழிவிடுமென்று நாங்கள். எங்களை தொடர்ந்து வரிசையாய் வண்டிகள். இதுவரை காணாத ஒரு விஷயம் கண்ணில் பட்டது. இப்போது தாயும் சேயுமாய் இரண்டு பைசன்கள் கண்ணில் முழுதாய் தென்பட்டன.
குட்டி பைசன் இடதுவலது என மாறிமாறி ஓட தாயும் அதைவிட்டு சற்றும் அகலாது நெருக்கமாய் ஓடியது. சில வினாடிகளில் குட்டி பொறுமையாய் நகர தாயும் அவ்வாறே நகர்ந்தது. இப்போது சாலையின் நடுக்கோட்டில் நடக்க ஆரம்பித்தன.

பச்சை மரங்களுக்கு நடுவே ஓர் தார்சாலை. அச்சாலையின் நடுவே ஓர் தாயும் சேயும் மெல்லிய காற்றில் மெய்மறந்து நடப்பது என்னே அழகு! அக்காட்சியின் அழகு சற்றும் குலையாத வண்ணம் அவற்றை பின்தொடர்ந்து சில நிமிடங்கள் நாங்களும் இயற்கைக் காற்றை சுவாசம் செய்தவாறு சென்றோம். சிறிது நேரம் கழித்து எங்களுக்கு மனமிரங்கி அவையிரண்டும் சாலையின் வலதுபாதியில் செல்ல இடதுபாதியில் வண்டியை செலுத்தினோம். அவற்றைக் கடந்ததும் வண்டி வழக்கம்போல் வேகமெடுத்தது.