காலை 11:30 மணிக்கு Antelope Canyon சுற்றி பார்க்க ஆன்லைன் பதிவு செய்திருந்தோம். Horseshoe Bend என்னும் இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கெல்லாம் Antelope Canyon செல்வதற்கு டிரக்குகள் புறப்படும் இடத்தை அடைந்து விட்டோம். முன்பதிவு செய்த எல்லோரையும் சிறு சிறு குழுக்களாக பிரித்து தனித்தனி டிரக்குகளில் ஏற்றி அனுப்பினார்கள். சுற்றிலும் பாலைவனம் போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மட்டுமே தெரிந்தது. தூரத்தில் தூசி மண்டலமாய் காட்சியளித்தது. அதற்குள் டிரக்குகள் ஓடி மறைவதும் வெளிப்படுவதுமாய் இருந்தன.



ஓர் அரைமணி நேர காத்திருப்பிற்குப் பின் எங்கள் குழுவை ஏற்றிக்கொண்டு போக டிரக் வந்து நின்றது. டிரக்கின் பின்னால் இரண்டே இரண்டு இருக்கைகள். இரண்டும் நீண்டவை. ஒன்றையொன்று பார்த்தபடி இருந்தது. எப்போதும் எங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் முந்திக்கொண்டு சென்று இடம் பிடிப்பது வழக்கம். இப்போதோ இருவருமே செல்லவில்லை. கடைசியாக அமர்ந்தால்தான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே போக முடியுமென்று இருவரும் பொறுமையாக கடைசியில் ஏறினோம். இருக்கையின் கடைசியை பிடித்துவிட்ட சந்தோஷத்தில் புருவங்களை உயர்த்திக் கொண்டு அவனை பார்த்து சிரித்தேன் ஏதோ சாதிக்க முடியாததை சாதித்தது போல. அவனும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்திலெல்லாம் டிரக் புறப்பட்டு அப்புழுதிக் காட்டுக்குள் நாங்களும் மறைய ஆரம்பித்தோம்.
கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டு பக்கமும் உயரமான மண்மேடுகள் தென்பட ஆரம்பித்தன. 3 காத தூரம் வரை அகண்ட மண்சாலையும் மண்சாலையின் இரண்டு பக்கம் மண்மேடுகளும் தான் இருந்தன. டிரக்கின் பின்னிரண்டு சக்கரங்களும் மண்துகள்களை சுழற்றியெடுத்து காற்றில் கொஞ்சமும் என் கண்ணில் கொஞ்சமுமாய் போட்டது. அவனோ என்னை பார்த்து பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது. “இப்படியிருக்கும் என்று தெரிந்திருந்தால் பெரிய மனது பண்ணி விட்டுக் கொடுத்திருப்பேனே!” என்று சொல்லி சிரித்தேன். சில இடங்களில் மேடுபள்ளம் வந்து வண்டி எங்கள் எல்லோரையும் குலுக்கி எடுக்க ஒரு வழியாக இலக்கினை அடைந்தோம்.
Antelope Canyon நுழைவு வாயிலில் எங்கள் குழுவின் வழிகாட்டியான Baani(பெயர் சரியா என்று தெரியவில்லை) தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின் தான் அந்த Antelope Canyon-ஐ சொந்தமாக பராமரித்து வரும் Navajo என்னும் பழங்குடியை சார்ந்தவரென்றும் தன் தாத்தா காலத்திற்கு முன்பிருந்தே அவர்கள் இவற்றை பராமரித்து வருவதாகவும் சொன்னார். பின்பு Antelope Canyon எவ்வாறு உருவானது என்றும் சொன்னார்.
Antelope Canyon உருவாவதற்கு முன்பு அது பெரிய மணற்கல்லாக இருந்ததாம். “Navajo Sandstone” என்று அழைக்கப்பட்டதாம். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மணற்கல்லில் அரிப்பு ஏற்பட்டு Antelope Canyon-பள்ளத்தாக்கு உருவானதாம். மழைக்காலங்களில் மழைநீர் இப்பள்ளத்தாக்கின் மேல உள்ள விரிவான படுகைகளில் ஓடி பின் கீழுள்ள குறுகிய பாதைகளில் பாய்ந்தோடுவதால் மணலை அரித்தெடுக்கின்றனவாம். ஒரு சிறிய விரிசலில் தொடங்கி காலப்போக்கில் மழை வெள்ளம் அவ்விரிசல்களை செதுக்கி தாழ்வாரங்களை ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கினவாம். மழைநீரோட்டத்தால் இங்குள்ள தாழ்வாரங்களில் அலை போன்ற அமைப்பு உருவாகின்றதாம். Antelope Canyon பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்களை சொன்னபடி எங்களை உள்ளே அழைத்து சென்றார்.





உள்ளே இருபக்கமும் குறுகிய மென்மையான சுவர்கள். இருபக்க சுவர்களும் வளைந்து நெளிந்து மேல்நோக்கி எங்கோ போய்க்கொண்டிருந்தன. இரண்டும் இணைந்ததா இல்லையா என்று தெரியவில்லை. சுவர்களை முடிந்தவரை தொடாமல் நடக்குமாறு பாணி எங்களிடம் கேட்டுக்கொண்டார். காரணம் அச்சுவர்களில் இருக்கும் மண்துகள்களும் அவற்றின் அலை போன்ற அமைப்பும் தொந்தரவு செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. அவைதான் அதற்கு அழகே. அக்குறுகிய பாதை வழியே மேலும் நடந்தோம். சற்று தூரம் சென்று மேலே அண்ணார்ந்து பார்த்தால் சில இடங்களில் விரிசலான படுகைகள் தெரிந்தன. அப்படுகைகள் வழியே வானமும் தெரிந்தது. மழைநீரால் செதுக்கப்பட்டு காற்றினால் மெருகூட்டப்பட்ட அதன் சுவர்கள் உச்சியிலிருந்தே அலையலையாய் இருப்பதை பார்க்க முடிந்தது. வறட்சிக் காலங்களில் உலர்ந்த அச்சுவர்கள் வழியே வீசும் பலத்த காற்று தளர்வான மண்துகள்களை நீக்கி மெருகூட்டுவதால் சுவர்கள் மேலும் மேலும் மென்மையாகின்றனவாம்.
சில அடிகள் நடந்த பிறகு பாதை கொஞ்சம் அகலமானது. மேலிருக்கும் விரிசல் வழியாக ஒளிக்கற்றைகள் உள்ளே புகுந்து அவ்விடத்தை அலங்கரித்தன. சூரிய ஒளி சுவரின் வளைந்த பகுதிகளில் விழுந்து சிவப்பும் ஆரஞ்சுமாய் ஒளி பிரதிபலிப்பது காண்போரை பிரமிக்க வைத்தது. அச்சுவர்களின் சிவப்பு நிறத்திற்கு மணலில் வெவ்வேறு அளவுகளில் படிந்துள்ள Iron Oxides ரசாயன கலவை தான் காரணமாம். இப்போது எல்லாருடைய கேமராக்களுக்கும் வேலை வந்துவிட்டது. ஒவ்வொருவராய் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்து சென்றோம். சில இடங்களில் ஒளிக்கற்றையின் பாதையை தெளிவாய் புகைப்படம் எடுக்க சில யுக்திகளை பின்வருமாறு பாணி சொல்லிக் கொடுத்தார். கீழிருந்து கொஞ்சம் மணலை கையில் எடுத்து ஒளிக்கற்றை வரும் பாதையில் வீச வேண்டும். அம்மணலின் துகள்கள் காற்றில் பறப்பதால் ஒளிக்கற்றைகள் தரைமேல் விழுவதை தெளிவாய் காண முடியும். அப்போது எடுக்கப்படும் புகைப்படத்தில் இன்னும் அழகு கூடித் தெரியும். இப்படி எல்லோரும் புகைப்படம் எடுக்க மணல் அள்ளிப்போட்டு அங்கேயே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.

ஓர் இடத்தில் மேற்படுகை விரிசல் வழியே லேசாக ஒளிக்கற்றை விழுந்து கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் கைக்கோர்த்து அதை சில நொடிகள் பூமியில் விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டோம்😉. அது நன்றிக் கடனாய் எங்கள் கைகளில் பிரகாசங்களை அள்ளித்தந்தது. அதனை புகைப்படம் எடுத்துக் கொள்ள மறந்து விடுவோமா என்ன!
இப்படி பிடித்த இடங்களிலெல்லாம் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் செம்மண்ணாடை தரித்து அப்பாதையின் முடிவினை அடைந்தோம்.
Leave a comment