HorseShoe Bend – AZ

ஆழமான மென்மணலாலான நடைபாதை ஒன்று பார்க்கிங்கிலிருந்து Horseshoe Bend-இற்கு எங்களை கூட்டிச் சென்றது. பாதி தூரம் வரை சமதளம் தான். அதில் கஷ்டப்பட்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பெரிய சிரமம் ஏதுமில்லை. தூரத்தில் ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் இருப்பதை பார்த்துக் கொண்டே நடந்தோம். இடம், வலம், முன், பின் என கண்ணில் பட்டவையெல்லாம் செம்பாறைகள் மட்டுமே.

பாதையின் முடிவில் பார்வையாளர்கள் சிலர் செம்பாறைகள் மேல் ஏறி நின்று எதையோ குனிந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் பாறைகளிலிருந்து அவர்கள் எப்போது இறங்குவார்கள் என்று எதிர்பார்த்து வரிசையில் நிற்பது போல் தெரிந்தது. அவர்களை நெருங்க நெருங்க HorseShoe Bend-ஐ அடைந்து விட்டோம் என்று புரிந்தது. எத்தனை தூரம் நடந்தோமென்று கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அது 0.7 காத தூரம் என்றது. இப்போது நாங்கள் நிற்குமிடம் HorseShoe Bend Overlook. கடல் மட்டத்திலிருந்து 4,200 அடி உயரமுள்ள மிகப்பெரிய செம்பாறை. அதன் உச்சியிலிருந்து 1000 அடியில் அதனைத் துளைத்துக் கொண்டு ஓடும் ஓர் நதி நீரோடை. அந்நீரோடை தன்னைத்தானே வளைத்துக் கொண்டு குதிரைவாலி வடிவில் எங்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்நதி கொலராடோ ஆற்றின்(Colorado River) ஓர் அங்கம்.

Horseshoe Bend Overlook, Page, Arizona

கீழே  1000 அடியில் அந்நதி ஓடிக் கொண்டிருப்பதை செம்பாறையின் விளிம்பில் நின்று பார்க்க முடிந்தது. அந்நதி நீரோடையில் சில படகுகள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. விசைப்படகுகள் சில நீரைக் கிழித்து நுரைகளை அள்ளி வீசியபடி அவற்றை முந்திக் கொண்டு சென்றன. இக்காட்சிகள் யாவும் உச்சியிலிருந்து பார்க்கும் எங்களுக்கு ஓர் ஏரியின் வான்வழிக் காட்சியை ஒத்ததே.

Translation

Leave a comment

Leave a comment