Zion National Park – UT

இன்றைய பயணம் இதோ தொடங்கி விட்டது!

Zion National Park-இன் கிழக்கு வாயிலிலிருந்தே இருபக்கங்களிலும் பழுப்பு நிறத்தில் கம்பீரமாய் பெரிய பெரிய மணற்கற்கள் நின்றன. அவற்றோடு அடர்பச்சை மரங்கள் ஒன்று கூடி கடந்து செல்வோரை வசீகரிக்க செய்தன. கொஞ்ச தூரம் கடந்ததும் சாலையின் நடுவே ஓர் பெரிய மணற்கல்(Checkerboard Mesa) குறுக்குவெட்டுகளுடன் தெரிந்தது. அதை நெருங்க நெருங்க இன்னும் பெரிதாய் தெரிந்தது. அக்கல்லின் உச்சியிலிருந்து அலையலையாய் வடிவமைப்பு நேற்று பார்த்த Antelope Canyon-இன் வடிவமைப்பை ஒத்திருந்தது. நிச்சயம் இதுவும் மணலரிப்பின் வேலைப்பாடாகத் தான் இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். அம்மணற்கல்லை நெருங்கியதும் சாலை வலதுபுறம் திரும்பியது.

Pine Creek Canyon Overlook

அடுத்த பத்து நிமிடங்களிலெல்லாம் Canyon Overlook பார்க்கிங் வந்துவிட்டது. இது கொஞ்சம் சவாலான பயணம் தான். தொடங்கியதுமே செங்குத்தான படிக்கட்டுகள் அமைந்த ஒரு மிகப் பெரிய பாறையைக் கடந்தால் தான் இலக்கை அடைய முடியும் என்றாயிற்று. அப்பாறையின் உச்சிக்கு சென்றதும் தெரிந்துவிட்டது நடப்பது கொஞ்சம் கடினம், அதிக கவனமும் அவசியமென்று. கையிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்து பைக்குள்ளே போட்டாயிற்று. வெயில் கொஞ்சம் கடுமையாய் இருந்தபோதும் நாங்கள் நடந்து செல்லும் மலையே எங்களுக்கு நிழல் தர, நடப்பது கொஞ்சம் சாத்தியமானது.

மலையின் விளிம்பிலிருக்கும் இப்பாதை சில இடங்களில் ஒருவர் மட்டுமே நடக்கும் அளவுக்கு குறுகியது. சில இடங்களில் இருவர் நடக்கலாம் என்றிருந்த போதும் பெரும்பாலும் யாரும் அப்படி நடக்கவில்லை. காரணம், இடதுபுறம் அடிப்பகுதியில் எங்களையொட்டிய ஒரு பெரும்பள்ளத்தாக்கு, அதில் குதித்தெழுந்து வரும் வீரர் எங்களுள் எவரும் இல்லை என்பதே. பள்ளத்தாக்கை தவிர்த்து கண்கள் அதைத் தாண்டி எதிரிருக்கும் இயற்கை காட்சிகளில் பார்வையை செலுத்தியது. வலதுகையால் மலைச்சுவரைப் பிடித்துக் கொண்டு இடதுபக்கம் தோன்றி மறையும் மலைகளையும் மற்ற காட்சிகளை பார்த்துக் கொண்டே நடந்தோம். கொஞ்சம் வெப்பம் கலந்த காற்று தான் வீசியது. ஒரு சில நிமிடங்களில் மூச்சுவாங்கி கலைத்துப் போக எப்போது உச்சியை அடைவோம் என்று நினைக்கையில், இதுவரை குறுகலாய் இருந்த பாதை இப்போது வலப்பக்கம் விரிவடைந்தது. கடும்தாகத்தில் கிட்டிய நீராய் நாங்கள் இளைப்பாற மலை தன்னைத்தானே குடைந்துக் கொண்டு கொஞ்சம் இடமளித்தது போலிருந்தது. அங்கு பாறையின் மேற்கூரையிலிருந்து வெயிலில் உருகிய பனிக்கட்டிகள் சிறுசிறு துளிகளாய் வெளிப்பட்டு அவ்விடம் முழுதும் குளிர் பரப்பிக் கொண்டிருந்தன. மூலையிலிருந்த பாறைக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அதில் உட்கார்ந்து தண்ணீர்க் குடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம்.

வழியில் சில இடங்களில் பாதுகாப்பிற்காக இரும்பு கைப்பிடிகள் போடப்பட்டிருந்தன. நடப்பதற்கு மலை விளிம்பு வழிக் கொடுக்கா இடங்களில் மரப்பலகைகள் கொண்டு அமைக்கப்பட்ட பாலம் உதவியது. முதலடி எடுத்து வைக்கும் முன் மனதிற்குள்ளே ஒரு பத்துக் கேள்விகளேனும் எழுந்திருக்கும். “நடக்கும்போது ஒரு வேலை ஆடுமோ?”, “திடீரென்று பலகை உடைந்து விட்டால்?” – எல்லாமே இப்படிப்பட்ட ஏடாகூடமான கேள்விகள் தான். கீழே பார்க்காமல் நடந்துவிட வேண்டும் என்று நினைக்கையில் M.Kumaran S/o Mahalakshmi படத்தில் நகைச்சுவை நடிகர் Vivek நடித்த காட்சி தான் நினைவுக்கு வந்தது. என் மனம் உள்ளுக்குள்ளே “கண்ணாத்தா கண்ண கண்ண மாரியாத்தா” என்றது. ஆனால் அவனுக்கு ஏது பயம். என்னை முந்திச் சென்று, “பயப்படாமல் வா” என்றான். கைகளை நீட்டி மேலேற்றினான். இரண்டடி நடந்ததும் பயம் பறந்து போனது. அடுத்தடுத்து வந்த பாதைகளில் பயமின்றி இயல்பாய் நடந்தேன். ஒரு கட்டத்திற்கு பிறகு இப்பயணம் கடினமாய் தெரியவில்லை. முன்பிருந்தது போல தான் இப்போதும் பாதை இருந்தது. ஆனால் ஏனோ இப்போது பயமில்லை.

Pine Creek Canyon Overlook, Zion National Park, Utah, USA

மலையுச்சி அடைந்ததும் சுற்றியிருந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் பிரம்மாண்டமாய் தெரிந்தன. இங்கிருந்து பார்த்தால் Zion-இன் கரடுமுரடான நிலப்பரப்பும் கூட ஒரு வகையில் நம் கண்களை ஈர்க்கக்கூடியதுதான் என்றே தோன்றியது. எங்களுக்கு முன் நடக்கத் தொடங்கிய பலர் கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் விலகும் வரை வரைபடத்தையும் அங்கிருந்த விளக்க படத்தையும் பார்த்து தூரத்தில் தெரியும் இடங்கள் என்ன என்ன என்று தெரிந்துக் கொண்டோம். அதில் தூரத்தில் தெரியும் இரண்டு செங்குத்தான பாறைகள் 7000 அடிக்கு மேல் உயர்ந்தவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் கூட்டம் கழிந்ததும் விளிம்பருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். ஏறுவதைக் காட்டிலும் இறங்குவது சுலபமென்றாலும் ஆங்காங்கே சரிவுகள் வர முன்பைவிட அதிக கவனம் தேவைப்பட்டது. அடுத்த 25 நிமிடங்களிலெல்லாம் பார்க்கிங்கை அடைந்துவிட்டோம். “போலாமா?” என்றபடி அவன் அடுத்த இலக்கை நோக்கி காரை செலுத்தினான்.


மீண்டும் முன்பிருந்தது போல் இருபுறமும் மணற்கல் பாறைகளும் மரங்களுமாய் கொஞ்ச தூரம் செல்ல, ஒரு சிறிய சுரங்கப்பாதை வந்தது. பாறையைக் குடைந்து செய்த அச்சிறு குகையைக் கடக்க எடுத்துக் கொள்ளக் கூடிய நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவு தான். இன்னும் சில மைல் தூரம் செல்ல இன்னொரு சுரங்கப்பாதை(The Zion-Mount Carmel Tunnel) வந்தது. இது முந்தைய சுரங்கப்பாதையை விட நீளமானது. இடதுபக்கம் முழுவதுமாய் பாறைகள் இருளுக்கு வழிவிட்ட போதும் வலதுபக்கம் அவ்வப்போது சில இடைவெளிகள் வெளிச்சத்தை அள்ளி வீசி இருளைக் கலைத்துக் கொண்டிருந்தன. இப்போது காரிலிருந்து வெளிப்படும் வெளிச்சமும் கூட இருளை வெளியேற்ற முயற்சி செய்து முன்னேறிக் கொண்டிருந்தது. இப்படி இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே முடிவில்லா இட ஆக்கிரமிப்புப் போர் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது தெரியும் இடைவெளிகளின் வழியே அருகிலிருக்கும் மணற்பாறைகளையும் மரம், செடிக் கொடிகளையும் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டே சுரங்கப் பாதையைக் கடந்துச் சென்றோம்.


The Narrows Riverside Walk

காரை visitor center பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு visitor center-இல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரைபட அட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டோம். இங்கிருந்து மேலும் உள்ளே செல்ல பேருந்தைத் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லையென்பதால் பேருந்து ஒன்றில் ஏறி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பேருந்து பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட வனக்காப்பாளர் ஒருவரின் குரல் ஒலிபெருக்கி வழியாக எங்கள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. அக்குரல் கடந்துக் கொண்டிருக்கும் இடங்கள் வானிலை மாற்றங்களால் உருவான விதத்தை விளக்கிக் கொண்டே வந்தது. அதனைக் கேட்டுக் கொண்டே போனதால் வரைபட உதவியின்றி வேடிக்கைப் பார்த்தபடி பயணிக்க முடிந்தது. Temple of Sinawa பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தியதும் இறங்கி நடக்கத் தொடங்கினோம்.

அது கான்கிரிட் பாதை என்பதால் நடப்பதற்கு வெகுசுலபமாக இருந்தது. இருபெரும் மண்மலைகளுக்கு நடுவே செல்லும் அப்பாதையை ஒட்டி வலப்பக்கம் மலைச்சுவர்கள், இடப்பக்கம் மண்தரை, மண்தரையைத் தழுவியோடும் ஒரு நதி. பெயர் Virgin River. அந்நதியைத் தொடர்ந்தே இந்த பயணம் முழுவதும் இருந்தது. அந்நதியின் இரண்டு பக்கங்களிலும் மண்தரைமேலே மெலிதான தண்டுகளோடு செழித்து வளர்ந்த மரங்களும் அவற்றைச் சுற்றி பச்சை பசேலென புற்களும் அப்பிரதேசம் முழுதும் ரம்மியமான சூழலை உருவாகியிருந்தன. கவர்ந்திழுக்கும் இக்காட்சிகளில் கண்கள் மயங்கிய போதும் கால்கள் தானாய் நடைபோட்டது. அதிவேகமாக நடந்து செல்லும் சிலர், இதற்கும் மேல் நடக்க முடியவில்லையே என்று இளைப்பாற இடம் தேடும் சிலர், தண்ணீர் குடித்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்து நிற்கும் சிலர் என்று பலரைக் கடந்து சென்றோம்.

வழி நடுவே ஓரிடத்தில் அணில்கள் சில வித்தைகள் காட்டி வருவோர் போவோரை மேலும் பார்க்கச் சொல்லி ஆர்வமூட்டின. அதில் ஒரு அணில் முன்னிரு கால்களைத் தூக்கிக் கொண்டு சுற்றி நிற்கும் ஒவ்வொருவரையும் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே முன்னோக்கி நடந்தது. மற்றொரு அணில் எல்லோரும் படம் பிடிப்பதை உணர்ந்தது போல் விதவிதமாக நின்று புகைப்படம் எடுக்க விட்டது. சுற்றியிருக்கும் எல்லோருக்கும் அவற்றின் செய்கைகள் வியக்கத்தை அளித்தன. பிறகு அவை ஒன்றோடொன்று ஓடிப்பிடித்து விளையாட கூட்டம் மெல்ல மெல்ல கலைந்தது.

சில நிமிடங்களுக்கு அவ்வணில்களின் செய்கைகளை பேசிக் கொண்டே போனோம். அடுத்த சில தூரத்திற்கு பாதை கொஞ்சம் மேடாக இருந்ததால் நடக்க நடக்க வியர்க்க ஆரம்பித்தது. நதியிலிருந்து எழுந்த மெல்லிய குளிர்காற்று கூந்தல் கலைத்து அவ்வப்போது விசிறிச் செல்ல களைப்பெல்லாம் அக்காற்றோடு கரைந்து போனது. தற்செயலாக அவனைத் திரும்பி பார்த்தேன். அவன் தலைமுடி வருடி கண்ணிமை ஸ்பரிசித்துச் செல்லும் அந்நதிக்காற்று அவனை என் கருவிழிக்கு இன்னும் அழகாய் காட்டியது. அவன் கையை இன்னும் இறுகப் பற்றிக்கொள்ள என்னையும் அறியாமல் உதடுகள் ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்தது. நிச்சயம் அது 90-களில் வெளிவந்த பாடல் தான்.

இடையில் ஓரிடத்தில் பாதை கொஞ்சம் மேடானது. அம்மேட்டில் நின்று பார்த்தபோது நதிவெள்ளம் பெருக்கெடுத்து நாங்கள் நின்ற திசை நோக்கி வந்து பிறகு இடப்பக்கமாய் வளைந்தோடியது. உயர்ந்த இருபெரும் மணற்பாறைகளுக்கு நடுவே அந்நதி பாய்ந்து வந்த காட்சி இயற்கை எவ்வளவு பிரம்மாண்டத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறது என்றுணர்த்தியது. அத்தனை வேகத்தோடு பாய்ந்தோடிய நதியோடு தெப்பங்களை செலுத்தியவாறு ஒன்றிரண்டு பேர் துணிந்து விரைந்தனர். இக்காட்சிகளை பார்த்துக் கொண்டே மேலும் நடந்தோம். இதுவரை நதிக்கரையையொட்டி வளர்ந்திருந்த புற்கள் இப்போது குறைந்து மண்தரை தோன்றியது. கரையோரம் சிறு பாறைமேல் நின்றிருந்த சிறுவர்கள் தரையில் கிடந்த கற்களை எடுத்து ஒவ்வொன்றாய் நதியில் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

“கம்பீர நெடுஞ்சுவர் அரணாய் நிற்க கர்ஜிக்கும் நதியொன்று நடுவே பாய்ந்தோடி வரக் கண்டேன்!”

இதோ வந்துவிட்டது இன்றைய பயணத்தின் இலக்கு!

வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போனதில் எத்தனை தூரம் நடந்தோமென்றே தெரியவில்லை. இருபக்கங்களிலும் இருந்த மலைகளுக்கு நடுவேயிருந்த இடைவெளிக் குறைந்து இப்போது குறுகலானது. இதுவரை நடந்து வந்த கான்கிரிட் பாதை முடிவடைந்து மலைச்சுவர் மட்டும் நீளமாய் தொடர்ந்தது. மலைச்சுவர் இரண்டிற்கும் நடுவே வெள்ளப்பெருக்கெடுத்து வந்த நதி முன்பு பார்த்ததைவிட இன்னும் ஆக்ரோஷமாய் தெரிந்தது. The Narrows தொடங்கும் இடம் இது தான். சாதாரண நாட்களில் இங்கே நீரிலிறங்கி மேலும் நடந்தால் பயணம் இன்னும் வித்தியாசமான அனுபவமாய் இருக்குமாம். இன்று வானிலை மாற்றத்தால் திடீர்வெள்ளம் ஏற்படவே இதற்கும் மேல் பயணிக்க முடியாது என்ற நிலையில், கரையோரம் நின்று பார்த்து ரசித்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் வந்த வழி நடக்கத் தொடங்கினோம்.


Leave a comment

Other Interesting Stories

Arizona

Leave a comment